Archives: ஜூன் 2026

உனக்கென்ன

“அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?” என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.

நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். “எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?” என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).

அதற்கு இயேசு, “உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.” (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக. 

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர். பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

 

டோனாவூரில் அன்பு

"அம்மா" என்பது தாய்க்கான தமிழ் வார்த்தையாகும், இது எமி கார்மைக்கேலின் கல்லறையின் இடத்தில் உள்ள பறவைகளுக்கான குளத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டோனாவூரில் உள்ள அவரது மிஷன் பள்ளி, தேவதாசிகளாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரு புகலிடமாக மாறியது. அவரது ஆரம்ப ஆண்டுகளில் பல இரவுகளில், எங்காவது ஒரு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக, சேலை உடுத்திக்கொண்டு சைக்கிளில் செல்வார் என்று கூறப்படுகிறது. 1931 இல் கீழே மோசமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் படுத்த படுக்கையான பிறகும், மற்றவர்கள் மூலம் இந்தக் குழந்தைகளை மீட்பதைத் தொடர்ந்தார். அவர் பல கடிதங்கள் மற்றும் புத்தகங்களை எழுதினார், அவை சேவையைத் தொடரவும், பள்ளிக்கு நிதி பெறவும் உதவின. குழந்தைகளை எமியிடம் ஈர்த்தது எது என்று கேட்டபோது, அவர்கள் “அன்புதான். அம்மா எங்களை நேசித்தார்" என்றார்கள்.

சில சமயங்களில் அன்புதான் சகல நற்பண்புகளுக்கும் தாய் என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். உண்மையான அன்பை கிறிஸ்துவில் அனுபவிக்க முடியும், ஏனென்றால் அவர் அன்பின் மனு உருவம் (வ.8). கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, நமக்கு உண்மையான அன்பின் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது அல்ல. அவர் தகுதியற்றவர்களையும் நேசித்தார் (வ.11). தேவன் நம்மை நேசிக்கும் விதத்தில் நாம் அன்பைப் பார்க்கும்போது, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய நமது கண்ணோட்டத்தை அது மாற்றுகிறது. இயேசுவைப் போல நாம் நேசிக்காதவரை, தேவனை உண்மையாக அறிய முடியாது என்பதை உணர உதவுகிறது (வ.7-8). பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவசாயலில் படைக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27) மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு தேவை. தேவபிள்ளைகளாகிய நாம், உண்மையான, கறைபடியாத அன்பின் அர்த்தத்தை, அன்பிற்காகப் பசியால் வாடுபவர்களுக்குக் காட்டத் தகுதியான இடத்தில் இருக்கிறோம். டோனாவூா் அடிமைப் பெண்களின் அன்பின் திருவுருவமாக மாறிய எமியைப் போல நாமும் நம் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், கிரியையிலும் இயேசுவின் உண்மையான அன்பை உருப்படுத்துவோம். 

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப் பலர் கருதுகின்றனர்.

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக. 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆரோக்கியமான இருதயம்

மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்” பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார். ஆர்தர் ஜாக்சன்

 

தேடி மீட்டெடு

சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் கடலில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் படகின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார்.

அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.

நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். 

 

பரீட்சயமான நீா்நிலை

தேவன் ஊக்குவிப்பதை உணர்ந்து, ஒரு எழுத்தாளராக ஊழியத்தில் அவரைப் பின்தொடர நான் ஒரு நிறுவன வேலையைத் துறந்தேன். இருப்பினும், நான் உடனடி விளைவுகளைப் பார்க்கவில்லை. மாற்றமாகிக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெளியீட்டாளர் என்னை நிராகரித்ததை போல எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. முற்றிலும் ஏமாற்றமடைந்த நான், “தேவன் ஏன் என்னை அழைத்தார்?” என்றும் விட்டுவந்த வேலைக்கே திரும்பவும் எண்ணினேன். அப்போதுதான் அவர்களுக்கு எனது புத்தகத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியென்றும், நான் மேலும் அதனை எழுத வேண்டும் என்றும் மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அதுமுதற்கொண்டு, நான் கற்பனை செய்யாத வழிகளில் தேவன் என்னைப் பயன்படுத்துகிறார்.

என் பயணம் பேதுருவை எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் தனது மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அவரை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75). அவர் தன்னை குறித்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும் (வ.75). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஒருவேளை தன்னைத் திசைதிருப்பிக்கொள்ள, பேதுரு தனது சகாக்களுடன் மீண்டும் மீன்பிடிக்க பரீட்சயமான நீர்நிலைகளுக்குச் சென்றார் (யோவான் 21:3). விடிந்தபோது, அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை (வ.3). மாறாக, அவர்கள் கடற்கரையில் இயேசுவைக் கண்டார்கள் (வ.4). வலைகளை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களிடம் கூறி, காலை உணவுக்கு வரும்படி அழைத்தார் (வ.6-13)). அவர் பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" (வ.15) என்று பேதுருவின் அழைப்பைப் புதுப்பித்தார்.

தேவன் நம்மை அழைக்கும்போது, காரியங்கள் உடனே வாய்க்காமல் போகலாம். நம்மை நாமே நொந்துகொண்டு, விளைவுகளைக் குறித்து சந்தேகம் கொள்ளலாம். ஆனால் தேவன் நம்மைப் பயிற்றுவிக்கவும் சுத்தம் பண்ணவும் அந்த காலத்தைப் பயன்படுத்துகிறார், அதனால் அவர் நம்மை தம் மகிமைக்காகப் பயன்படுத்த முடியும் (யோவான் 15:2). எனவே, பலன்களைக் காணாதபோது, பின்னிட்டு, பரீட்சயமான தண்ணீருக்குத் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, தேவனின் நேரத்தை நம்பி பொறுமையாகக் காத்திருப்போம்.